Thursday, February 5, 2009

என் இனம் தமிழ் இனம்...


பல நாடுகளில் வழக்கு மொழிகள் மட்டும் பழக்கத்தில் இருந்த காலத்திலேயே
இலக்கண இலக்கியங்களில் சிறந்து நின்றோம் நாம்...

பொதிகையில் தமிழ் வளர்த்தார் அகத்தியர்...

திருக்குறள் எனும் திவ்ய நூல் இயற்றப்பட்டது இரண்டாயிரம் வருடங்கள் முன்பே ...

முத்தமிழ் சங்கம் தமிழுக்குத் தாய் வீடு...

சேர சோழ பாண்டியர்களின் செல்லக் குழந்தை தமிழ்...

எத்தனையோ வீர தீர பரம்பரைகள் செங்கோல் நாட்டிய நாடு...

போர்கள் தான் எத்தனை எத்தனை ...

இன்னும் பல வீரப் பின்னணிகள் கொண்ட தமிழ் இனம்
இன்று இலங்கையில் படும் துயரம் கண்டு கொதிக்கிறது நெஞ்சம்...

தமிழனே, நீ இலங்கையில் வடிக்கும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் ,
தமிழகத் தமிழ் இதயங்களில் கசியும் ரத்தம்...


ஈழத் தமிழர்களின் நிலை கண்டு கவலைகளே காலை உணவாகின்றன...

-- தமிழ் இனம்...

Monday, February 2, 2009

எங்கள் கிராமம்...


நகரத்தின் கலாச்சாரத்திற்கு மாறி அதன் போக்கிற்கு வளைந்து விட்ட போதும் ,
என் ஓய்வு நேரங்களை ஆக்கரமித்துக் கொண்டு
கண்முன் விரியும் என் கிராமம் ...


பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் அதிகம் பேசப்படாத ஒரு சின்னக் கிராமம் ...
அதிகப்படியாக ஐநூறு மக்களின் முகவரி அந்த கிராமம்...


மற்றபடி ஆறு மாதம் தண்ணீர் ஓடும் சிற்றோடை ,
மணிக்கொரு முறை வந்து போகும் நகரப் பேருந்து என
காற்று மாசுபாட்டை அறியாத ஒரு கிராமம்...


ஐந்தாம் வகுப்பு வரை கொண்ட பள்ளிக்கூடம் ,
மேல்நிலைப்பள்ளியாக கடந்த பத்து வருடங்களாக காத்துக் கிடக்கிறது...


விநாயகர் கோவில் திண்ணையில் எப்போதும்
இரண்டு மூன்று பெரியவர்களைப் பார்க்கலாம் ...
இன்னும் காவல் துறை எங்கள் கிராமத்திற்கு வந்ததாய்
எனக்கு நினைவில்லை...



மழை பொழிந்து விட்டால் போதும்,
பச்சை வர்ணம் அடித்தாற் போல்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை...


மழை பொழிந்த ஓரிரு நாடகளில் மண்ணை விட்டு
முட்டி மோதி வரும் சின்னஞ்சிறு புட்கள்
அதுவும் காலை நேரங்களில் பனித்துளி கிரீடம் சுமந்து கொண்டு கொள்ளை அழகு...



எங்கள் கிராமத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம் தவறாமல்
என் நினைவுகளில் நிறைந்து விடும் பொங்கல் விழா ...


மார்கழி மாதம் தொடங்கினாலே , சாணிப் பிள்ளையார்கள் அருகம்புல் கிரீடத்தோடும்
அரசாணிப்பூவோடும் உதிக்கத் தொடங்கி விடுவார்கள்....


பொங்கல் காலங்களில் எங்கிருந்து தான் வருமோ
அத்தனை அழகு எங்கள் கிராமத்திற்கு ...
நெல்லும் , கரும்பும் , மஞ்சளும்
அறுவடையாகி வீட்டு முற்றத்தை நிறைத்து விடும்...



பொங்கலுக்கு முதல் நாள் மாடுகள் எல்லாம்
கொம்புகளில் புது வர்ணத்தோடு சலங்கை
ஒலி எழ நடந்து வரும் அழகே அழகு...


மூன்று நாளும் பொங்கல் களை கட்டி விடும்...

இப்படி இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்

எங்கள் கிராமத்தைப் பற்றி ...




இந்திய தேசம்...


சுதந்திரர்களாகி அறுபத்தியொரு வருடங்களில் கணக்கிலடங்கா சாதனைகள்...

துறை தோறும் சாதனை சரிதங்கள்...

மருத்துவத்தில் மகத்துவம் கண்டோம் ...

அறிவியலில் அளப்பரிய சாதனை புரிந்தோம்...

அணு சோதனையில் அண்டை நாடுகளை வியப்பில் ஆழ்த்தினோம் ...

நம் ஒவ்வொரு விடியலையும் ஒரு சாதனை வரவேற்கிறது...







Thursday, December 18, 2008

இன்னும் என்ன இருக்கிறது வாழ...

நடு இரவில் கலைகிறது உறக்கம் ...

துரோகம் கண்டு கண்டு கருகிப் போன என் இதயத்துக்கு இதம் தேடி அலைய எனக்கு விருப்பமில்லை...


கண்ணீர்த் துளிகளை கர்ப்பம் தாங்கிய விழிகளோடு சாய்ந்து கொள்ள , தோள்களை தொலைத்து விட்டு

தனியே நான் மட்டும்...

நீ இல்லாமல் என்ன மிஞ்சியிருக்கிறது என் எதிர்காலத்தில்...

பார்வையைத் தொலைத்து விட்ட எனக்கு பாலை வனமும் பசும் சோலையும் ஒன்று தானே ,

செவிடாகிப் போன பின் ஓலமும் மெல்லிசையும் பிரித்தறிய முடியா விஷயங்கள் தானே...

உதடுகளுக்குள் சிறை பட்டு வெளியாக மறுக்கும் வார்த்தைகள் ,

ஒரு வேளை நீ வந்தால் தான் விடுதலை பெறுமோ என்னவோ...


இவையெல்லாம் அறிவார் யாரோ ....


பிரிவென்னும் பூதம் தன்னிரு கைகளில் நம்மிருவரையும் இரு வேறு திசைகளில் தூக்கி எறிய,


ஏது செய்வோம் நாம் ???

நீ திரும்பி வரும்போது நான் உயிரோடு இருந்தால் நிச்சயம் சந்திப்போம்..





எழுத வேண்டும் இன்னமும்....

இன்னும் எழுதப் படாமல் எத்தனை எத்தனையோ எனக்குள்...


உன்னை சந்தித்த முதல் நொடி...


முதன் முதலாக நான் கண் கலங்கிய போது என்னை ஆறுதல் படுத்த ,


வார்த்தைகளுக்காக நீ தடுமாறித் தவித்த நொடிகள்...



உன்னோடு வாதிட்டுவிட்டு இரவெல்லாம் உறக்கத்தை விவாகரத்து செய்த நொடிகள்...


இப்படி எத்தனை எத்தனையோ ,

இன்னும் எழுதப் படாமல் என் மனதுக்குள் கருவாய்....


Blogspot Templates by Isnaini Dot Com. Powered by Blogger and PDF Downloads